தேர்தல் நடைமுறையை மேம்படுத்த தேர்தல் கமிஷன் புதிய முயற்சி
தேர்தல் நடைமுறையை மேம்படுத்த தேர்தல் கமிஷன் புதிய முயற்சி
UPDATED : மே 30, 2025 05:03 AM
ADDED : மே 30, 2025 01:58 AM

புதுடில்லி: வாக்காளர் ஓட்டளிக்கும் நடைமுறையை மேம்படுத்தவும், தேர்தல் நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், கடந்த 100 நாட்களில் 21 புதிய முயற்சிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
தேர்தல் கமிஷனின், 26வது தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார், பிப்., 19ல் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற 100 நாட்களில் பல்வேறு புதிய முயற்சிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில், 21 புதிய முயற்சிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் விபரம்:
* ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை, 1,500ல் இருந்து, 1,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது
* வானுயர்ந்த குடியிருப்பு கட்டடங்கள், 'கேட்டட் கம்யூனிட்டி'கள் உள்ளிட்ட மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்
* வாக்காளர் ஓட்டளிக்க அதிகபட்சமாக 2 கி.மீ.,க்கு மேல் பயணிக்கக் கூடாது என்பதே குறிக்கோள்
* ஓட்டுச்சாவடி எண்ணை தெளிவுபடுத்துவதற்காக, வாக்காளர் தகவல் சீட்டுகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுஉள்ளன
* ஒவ்வொரு ஓட்டுச்சாவடி வாசலிலும், 'மொபைல் போன்'களை பாதுகாக்கும் சேவை மையம் அமைக்கப்படும்
* ஓட்டுச்சாவடி வாயிலில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் வேட்பாளர்கள் பூத்களை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். இது தற்போது, 200 மீட்டராக உள்ளது
* வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரின் தேவைக்காக தனித்தனியாக 40 இணையதளங்கள், மொபைல் போன் செயலிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரே 'டிஜிட்டல்' தளம் உருவாக்கப்பட்டுள்ளது
* இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, இந்திய பதிவுத்துறை ஜெனரலிடம் இருந்து நேரடியாக தகவல் பெறப்பட்டு பெயர் நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
* நாடுமுழுதும், 28,000க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 4,719 கூட்டங்களை தேர்தல் கமிஷன் நடத்தி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.