அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கெடு: யமுனை நீர் விவகாரத்தில் முற்றுகிறது மோதல்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கெடு: யமுனை நீர் விவகாரத்தில் முற்றுகிறது மோதல்
ADDED : ஜன 31, 2025 12:19 AM

புதுடில்லி: 'யமுனை நதியில், ஹரியானா அரசு விஷத்தை கலப்பதாக கூறிய குற்றச்சாட்டை உரிய ஆதாரத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை, 11:00 மணிக்குள் நிரூபிக்கத் தவறினால், இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில் உள்ள யமுனை நதியில் இருந்து வரும் தண்ணீர், டில்லி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கூடுதலாக உ.பி.,யில் இருந்தும் டில்லிக்கு குடிநீர் வருகிறது.
அமோனியா கலப்பு
இந்நிலையில், ஹரியானா அரசு யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார்.
டில்லி ஜல் வாரிய புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இன்ஜினியர்கள் இந்த உண்மையை கண்டறிந்ததை அடுத்து யமுனை நதியில் இருந்து பெறப்படும் தண்ணீர் மக்களுக்கு வினியோகிக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
விஷம் கலந்த தண்ணீரை குடிப்பதால், டில்லி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, ஆம் ஆத்மி அரசு மீது பழி சுமத்த பா.ஜ., சதி செய்வதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லி சட்டசபைக்கு பிப்., 5ல் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு கெஜ்ரிவால் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார். அதில், யமுனையில் இருந்து ஹரியானா அரசு அனுப்பும் தண்ணீரில், அளவுக்கு அதிகமாக அமோனியா கலக்கப்பட்டுள்ளது.
அதை, டில்லி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளால் மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றதாக மாற்ற முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
சோதனை
இதை தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு இரண்டாவது நோட்டீசை தேர்தல் கமிஷன் நேற்று அனுப்பியது.
அதில், யமுனையில் எவ்வாறு விஷம் கலக்கப்பட்டது, அதன் அளவு, தன்மை, அதை கண்டுபிடித்த பொறியாளர்களின் விபரங்கள், எங்கு சோதனை நடத்தப்பட்டது, விஷத்தைக் கண்டறியும் முறை உள்ளிட்ட விபரங்களை உரிய ஆதாரங்களுடன் இன்று காலை 11:00 மணிக்குள் கெஜ்ரிவால் சமர்ப்பிக்க வேண்டும்.
தவறினால், இந்த விவகாரத்தில் நாங்கள் உரிய முடிவை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

