அரசியல் கட்சியின் கருவியான தேர்தல் கமிஷன்; டி.கே. சிவகுமார் புகார்
அரசியல் கட்சியின் கருவியான தேர்தல் கமிஷன்; டி.கே. சிவகுமார் புகார்
ADDED : டிச 12, 2025 03:25 PM

பெங்களூரு:ஒரு அரசியல் கட்சியின் கருவியாக தேர்தல் கமிஷன் மாறிவிட்டதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி உள்ளார்.
தலைமை தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை கண்டித்து, டிச.14ம் தேதி தலைநகர் டில்லியில் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் டில்லிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில், கர்நாடகா காங்கிரசாரும் டில்லிக்கு செல்ல துவங்கி உள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ள அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் டில்லிக்கு செல்கிறார். பெங்களூருவில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
நான் ஓட்டுத் திருட்டு பிரசாரத்திற்காக டில்லி செல்கிறேன். இந்த பிரசாரத்தை 2023ம் ஆண்டிலேயே கர்நாடகாவில் ராகுல் தொடங்கினார்.
ஒரு அரசியல் கட்சியின் கருவியாக மாறிவிட்ட தேர்தல் கமிஷனுக்கு எதிராக போராடுகிறோம். இதை அம்பலப்படுத்தவே டில்லி செல்கிறோம். கர்நாடகாவில் இருந்து 1.42 கோடிக்கும் அதிகமான கையெழுத்துக்களை நாங்கள் பெற்றுள்ளோம்.
இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறினார்.

