ADDED : பிப் 16, 2024 12:43 AM

புதுடில்லி, தலைமை தேர்தல் கமிஷனில் தேர்தல் ஆணையராக இருந்த அனுாப் பாண்டே நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
டில்லியில் செயல்பட்டு வரும் தலைமை தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையர்களாக அருண் கோயல், அனுாப் பாண்டே ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், 65 வயதை நிறைவு செய்த அனுாப் பாண்டே நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசுப் பணிகளில், 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுாப் பாண்டே, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் ஆணையராக பதவியேற்றார்.
லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், அவர் ஓய்வு பெற்றுள்ளார். அனுாப் பாண்டே ஓய்வு பெற்றதை அடுத்து தேர்தல் கமிஷனர் பதவியில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தின்படி, மத்திய சட்ட அமைச்சர் தலைமையிலான ஒரு தேர்வுக் குழு மற்றும் இரண்டு மத்திய செயலர்கள் தலைமையிலான குழு, ஐந்து வேட்பாளர்களின் பெயர்களை பிரதமரின் பரிசீலனைக்கு அனுப்பும்.
அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையரை ஜனாதிபதி நியமிப்பார்.