ADDED : ஜன 01, 2025 12:43 AM

இந்தியாவின் பெரிய ஜனநாயக திருவிழாவான, லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடந்தது. கர்நாடகாவில் 5 வாக்குறுதி திட்டங்கள் அமல்படுத்தி இருப்பதால், மாநிலத்தில் 28ல் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு பொய்யானது.
காங்கிரஸ் 9 இடங்களிலும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ், பெங்களூரு ரூரலில் தோற்றார். பா.ஜ., வேட்பாளரான டாக்டர் மஞ்சுநாத், சுரேஷுக்கு 'சம்மட்டி அடி' கொடுத்து வெற்றி பெற்றார்.
முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட மன்னர் குடும்பத்தின் யதுவீர் அபார வெற்றி பெற்றார்.
தேவகவுடாவின் சொந்த ஊரான ஹாசனில், காங்கிரஸ் 30 ஆண்டுகளுக்கு பின், வெற்றி மாலை சூடியது.
பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மகள் பிரியங்கா, சிக்கோடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அவரது வயது 27. இது போன்று பீதரில் வெற்றி பெற்ற வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் கன்ட்ரேயின் வயதும் 27 தான். கர்நாடகாவில் இருந்து இந்த முறை லோக்சபாவுக்கு சென்ற, இளம் எம்.பி., என்ற பெருமையை இருவரும் பெற்று உள்ளனர்.
மாண்டியாவில் வெற்றி பெற்ற ம.ஜ.த., குமாரசாமி, பிரதமர் மோடி அமைச்சரவையில் கனரக தொழில் அமைச்சராக உள்ளார். பிரஹலாத் ஜோஷி உணவு அமைச்சராகவும்; ஷோபா மத்திய தொழிலாளர் இணை அமைச்சராகவும், சோமண்ணா ரயில்வே இணை அமைச்சராகவும் உள்ளனர்.

