தேர்தல் அறிக்கை! எதிர்க்கட்சிகளின் வழியை பின்பற்றும் பா.ஜ.,: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என வாக்குறுதி
தேர்தல் அறிக்கை! எதிர்க்கட்சிகளின் வழியை பின்பற்றும் பா.ஜ.,: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என வாக்குறுதி
ADDED : நவ 01, 2025 12:17 AM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி நேற்று வெளியிட்டது. எதிர்க்கட்சிகளை போல ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஏழை மாணவர்களுக்கு முதுகலை வரை இலவச படிப்பு என, ஏராளமான வாக்குறுதிகளை ஆளும் கூட்டணி அள்ளி வீசி உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. -----
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வரும் 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள, 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில், பா.ஜ., - காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளதால் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
இதில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், லோக் ஜனசக்தி 29 தொகுதிகளில் களமிறங்குகிறது. எதிர்க்கட்சியான, 'மஹாகட்பந்தன்' கூட்டணியில், பிரதான கட்சியான முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், 143 தொகுதிகளில் போட்டியிடுகிறது; 61 தொகுதிகளில் காங்., களம் காண்கிறது.
ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில், லாலு பிரசாத் மகனும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில், மஹாகட்பந்தன் கூட்டணி அறிவித்துள்ளது. இந்நிலையில், அதே பாணியை பின்பற்றி, ஆளும் தே.ஜ., கூட்டணியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா, முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகா உள்ளிட்டோர், 69 பக்கங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.

