தேர்தல் கருத்துக்கணிப்பு எதிரொலி: உச்சமடையும் சென்செக்ஸ்; ஒரே நாளில் 2 ஆயிரம் புள்ளி உயர்வு
தேர்தல் கருத்துக்கணிப்பு எதிரொலி: உச்சமடையும் சென்செக்ஸ்; ஒரே நாளில் 2 ஆயிரம் புள்ளி உயர்வு
ADDED : ஜூன் 03, 2024 11:26 AM

மும்பை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்துள்ளதை அடுத்து, மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலால் அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எது எனத் தெரியாமல் நிச்சயமற்ற போக்கு நிலவியது. இதனால், உள்நாட்டு பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் (ஜூன் 1) அனைத்து கட்ட தேர்தல்களும் முடிவடைந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்ற கணிப்பு வெளியானது.
இதனையடுத்து, மீண்டும் மோடி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டதாலும், நாளை (ஜூன் 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதாலும், பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் துவங்கியது. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 76,738.89 புள்ளிகள், நிப்டி குறியீடு 23,338.70 புள்ளிகள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி 2,058 புள்ளிகள் உயர்ந்து 76,019 புள்ளிகளாகவும், நிப்டி 628 புள்ளிகள் உயர்ந்து 23,158 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.