டில்லியில் முடிந்தது தேர்தல் கணிப்புகளில் பா.ஜ.,வுக்கு சாதகம்
டில்லியில் முடிந்தது தேர்தல் கணிப்புகளில் பா.ஜ.,வுக்கு சாதகம்
ADDED : பிப் 06, 2025 12:56 AM
புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு ஓட்டுப் பதிவு நேற்று அமைதியுடன் முடிந்தது. நேற்றிரவு நிலவரப்படி, 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள, 70 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக ஓட்டுப் பதிவு நடந்தது.
பெரும்பாலும் ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்தது. அதே நேரத்தில், பல தொகுதிகளில் ஓட்டுப் பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது.
ஒரு சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக, ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., பரஸ்பரம் குற்றஞ்சாட்டின.
டில்லிக்கு, 1952ல் சட்டசபை அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அது, 1956ல் ரத்து செய்யப்பட்டது. அதற்கு, 37 ஆண்டுக்குப் பின், 1993ல் மீண்டும் சட்டசபை அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் பா.ஜ., வென்றது. ஆனால், ஐந்து ஆண்டு ஆட்சியில் மூன்று முதல்வர்களை சந்தித்தது.
அதன்பின், 1998 முதல் 2013 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கடந்த, 2013 டிசம்பரில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.
அக்கட்சிக்கு அளித்த ஆதரவை காங்., திரும்பப் பெற்றதால், 48 நாட்களில் முதல்வராக இருந்த ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின்
தொடர்ச்சி 15ம் பக்கம்
டில்லியில் முடிந்தது ஓட்டுப்பதிவு...
முதல் பக்கத் தொடர்ச்சி
அரசு கவிழ்ந்தது.
அதைத் தொடர்ந்து 1 ஆண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. 2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67ல் வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
மதுபான ஊழல் வழக்கில் சிறை சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ததால், கடந்தாண்டு செப்.,ல் ஆதிஷி முதல்வரானார்.
தற்போது நடந்த தேர்தலில், தேசிய அளவில் 'இண்டி' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. பா.ஜ., வலுவான போட்டியைக் கொடுத்தது.
தேர்தலுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகள், பா.ஜ., பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என, தெரிவிக்கின்றன. மொத்தம் வெளியான, 1-0 கணிப்புகளில், ஏழு இதை தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், மூன்று கணிப்புகள், ஆம் ஆத்மிக்கு சாதகமாக உள்ளன.
இதன் வாயிலாக, 27 ஆண்டு இடைவெளிக்குப் பின், தலைநகர் டில்லியில் பா.ஜ.,வின் ஆட்சி அமைய உள்ளதாக, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன.
பா.ஜ., கூட்டணி 51 - 60 இடங்களையும், ஆம் ஆத்மி 10 - 19 இடங்களையும் பிடிக்கும் என, 'பியூபல்ஸ் பல்ஸ்' அமைப்பு கணித்துள்ளது.
இதுபோலவே, 'சாணக்கியா, ஜே.வி.சி., போல் டைரி, பி - மார்க், பியூபில்ஸ் இன்சைட், டி.வி. ரிசர்ச்' ஆகிய அமைப்புகளும், பா.ஜ.,வுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகும் என, கணித்துள்ளன. 'மைன்ட் பிரிங்க், மேட்ரிஸ், வீ பிரைசைட்' ஆகியவை, ஆம் ஆத்மியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என, கணித்துள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், காங்கிரசுக்கு, அதிகபட்சமாக, மூன்று இடங்கள் கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஓட்டு எண்ணிக்கை, 8ம் தேதி நடக்க உள்ளது.