தேர்தல் நேரத்தில் எச்சரிக்கை மைசூரு கலெக்டர் 'அட்வைஸ்'
தேர்தல் நேரத்தில் எச்சரிக்கை மைசூரு கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : பிப் 20, 2024 06:59 AM

மைசூரு: ''லோக்சபா தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,'' என, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜேந்திரா தெரிவித்தார்.
மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று லோக்சபா தேர்தல் தொடர்பாக, போலீஸ் மற்றும் அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜேந்திரா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் நெருங்கி வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ஓட்டுச்சாவடிகளில் குறைந்தபட்ச மின்சாரம், குடிநீர், சாய்வு தளம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கும் வரும்போது, மாவட்டம் முழுதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சோதனைச் சாவடிகளில் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் அனுமதியின்றி, பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது. அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழாக்கள் நடைபெற்றால், எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். உதவி ஆய்வு அலுவலர்கள் அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பிரச்னைகளை சரி பார்க்க வேண்டும்.
லோக்சபா தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக போலீஸ் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜேந்திரா ஆலோசனை நடத்தினார். இடம்: மைசூரு.

