தேர்தல் நேரம்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க பரிசீலிக்கலாம்: உச்சநீதிமன்றம்
தேர்தல் நேரம்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க பரிசீலிக்கலாம்: உச்சநீதிமன்றம்
ADDED : மே 03, 2024 05:28 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் எனக்கூறிய உச்சநீதிமன்றம், ஒருவேளை ஜாமின் வழங்கினால் விதிக்கப்பட வேண்டிய நிபந்தனை குறித்து 7ம் தேதி தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
டில்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, 'கெஜ்ரிவால் விவகாரத்தில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி பறிமுதல் செய்து இருந்தால், கெஜ்ரிவால் எப்படி இந்த முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதை விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்' எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
பரிசீலனை
இந்த வழக்கு இன்று (மே 3) விசாரணைக்கு வந்தபோது, லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், ''அவருக்கு ஜாமின் வழங்க முடிவு செய்யவில்லை; இந்த விவகாரத்தில் ஒரு கருத்தை முன்வைத்தோம் அவ்வளவுதான்; எவ்வித அனுமானமும் வேண்டாம். ஒருவேளை கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கினால் விதிக்கப்பட வேண்டிய நிபந்தனை குறித்து 7ம் தேதி தெரிவிக்க வேண்டும்'' என அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒத்திவைப்பு
அப்போது வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு, ''கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால் அது வழக்கு விசாரணைக்கு பின்னடைவை ஏற்படுத்தும்'' என்றது. இதனையடுத்து, ''கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமின் வழங்கக்கூடாது என்பது குறித்து அமலாக்கத்துறையின் விரிவான வாதத்தை 7ம் தேதி கேட்கிறோம். மேலும் சிறையில் இருந்தபடியே அவர் கோப்புகளில் கையொப்பமிடுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க வேண்டும்'' எனக்கூறி வழக்கை மே 7க்கு ஒத்திவைத்தார்.