தேர்தலும் ராமரும் : கர்நாடகாவில் காங்., பா.ஜ., போட்டா போட்டி
தேர்தலும் ராமரும் : கர்நாடகாவில் காங்., பா.ஜ., போட்டா போட்டி
ADDED : ஜன 07, 2024 08:52 PM

பெங்களூரு: வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை பொது தேர்தலுக்காக பயன்படுத்த ஆளும் காங்., மற்றும் எதிர்கட்சியான பா.ஜ., ஆரம்பித்து உள்ளது.
வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் இந்துக்கள் தங்களின் வீடுகளின் முன்பாக ஐந்து விளக்குகள் ஏற்ற வேண்டும் என தேசிய தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து கர்நாடகா மாநிலத்தில் எதிர்கட்சியாக பா.ஜ., இந்த விசயத்தை கையில் எடுத்து உள்ளது. அதன் ஒரு கட்டமாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மகனும், பா.ஜ., மாநில தலைவருமான விஜயேந்திரா ஆகியோர் ராம அக்ஷதா திட்டத்தை துவக்கினர். தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்துக்கள் வீடுகளுக்கு சென்று கும்பாபிஷேக அழைப்பிதழ் தருவதுடன் அரிசியையும் வழங்கி வருகின்றனர்.
தொடர்ந்து மாநில தலைவர் விஜயேந்திரர் கூறுகையில், ராமர் பக்தர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விளக்குகள் ஏற்ற வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியும் கும்பாபிஷேகம் நடைபெறும் தினமான 22-ம் தேதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்துமாறு அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.
வரும் மே மாதத்தில் நாடு முழுவதும் நடைபெற உள்ள பொது தேர்தலை கணக்கில் கொண்டு இந்து வாக்காளர்களை கவரும் வகையில் இரு பிரதான கட்சிகளும் ஈடுபட்டு உள்ளது.