ADDED : பிப் 14, 2024 01:14 AM
திருவனந்தபுரம், தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிரெதிராக செயல்பட்டு வருகின்றன.
கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில், யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதுதவிர, வேறு சில சம்பவங்களில் சிலர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் கூட்டணி நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
'நாங்கள் விலங்குகளை குறைகூற மாட்டோம். ஆனால், மக்களை பாதுகாக்க மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு பொறுப்பேற்று வனத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

