ADDED : ஜன 05, 2025 11:03 PM

மைசூரு:மைசூரில் உணவு தேடி வந்த போது, இரண்டு தடுப்புகளுக்கு இடையில் சிக்கிய 30 வயது யானையை, கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.
மைசூரு மாவட்டம், ஹூன்சூரின் நாகரஹொளே புலிகள் பாதுகாப்பு பகுதிக்கு உட்பட்ட வீரனஹொசஹள்ளி மண்டலத்தில் முதகனுார் ஏரி உள்ளது. இந்த ஏரியில், வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் யானைகளை தடுப்பதற்காக, ரயில்வே தண்டவாளங்கள் தடுப்புகளாக அமைக்கப்பட்டு உள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் உணவு தேடி வந்த யானை, தடுப்புகளை தாண்ட முயற்சித்த போது, சிக்கிக் கொண்டது. யானையின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த 'ரேடியோ காலர்' மூலம், யானை நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது.
நேற்று அதிகாலை நாகரஹொளே புலிகள் திட்ட இயக்குனர் சீமா, வனத்துறை அதிகாரி லட்சுமிகாந்த் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.
ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் கிராம மக்கள் உதவியுடன், யானை விடுவிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட உற்சாகத்தில் யானை வேகமாக வனப்பகுதிக்குள் ஓடியது.
இது தொடர்பாக நாகரஹொளே புலிகள் திட்ட இயக்குனர் சீமா கூறியதாவது:
தடுப்புகளில் சிக்கிய யானை, 2021ல் நாகரஹொளேயில் பிடிக்கப்பட்ட யானை என்பது, அதன் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த 'ரேடியோ காலர்' மூலம் தெரிந்தது. இதன் உதவியால், யானை சிக்கிய இடத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர்.
கர்நாடகாவில் இதுவரை 10 யானைகளுக்கு 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்டுள்ளது. நாகரஹொளே பகுதியில் மட்டும் ஆறு யானைகளுக்கு பொருத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
� உணவு தேடி வந்து தடுப்புகள் இடையே சிக்கிய யானை. �மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் ஓடியது.

