ADDED : பிப் 18, 2024 01:11 AM
வயநாடு, மனிதர்களை கொல்லும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை ஒழிக்கக்கோரி கேரளாவின் வயநாடு பகுதியில் பல்வேறு கட்சியினர் நடத்திய முழு அடைப்பு போராட்டம் காரணமாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மனந்தவாடி பகுதியில் சமீபத்தில் யானை மிதித்ததில் அஜி, 42, என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடந்த 16ம் தேதி குர்வா தீவு அருகே காட்டு யானை தாக்கி வனத்துறை வழிகாட்டி பால் என்பவர் உயிரிழந்தார்.
அடிக்கடி நடக்கும் விலங்குகள் - மனித மோதல்களுக்கு தீர்வு காணக்கோரி நேற்று வயநாடு மாவட்டம் முழுதும் முழு அழைப்பு போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதனால் மாவட்டம் முழுதும் கடைகள் மூடப்பட்டிருந்தன; வாகன போக்குவரத்தும் முடங்கியது. முழு அடைப்பால், கல்பெட்டா, பதேரே, மனந்தவாடி, லகிடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.