'எம்புரான்' தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனிடம் 'கிடுக்கி'
'எம்புரான்' தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனிடம் 'கிடுக்கி'
ADDED : ஏப் 08, 2025 05:34 AM

கொச்சி : பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எல் 2: எம்புரான் என்ற திரைப்படம், தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், சமீபத்தில் வெளியானது.
இதில், குஜராத் கலவரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றன. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சர்ச்சை காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன.
எல் 2: எம்புரான் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன், 80, சிட் பண்ட்ஸ் மற்றும் படத்தயாரிப்பு தொழிலும் ஈடுபட்டு வருகிறார்.
அன்னிய செலாவணி சட்டத்தை மீறி, சிட் பண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டதாகக் கூறி, கோபாலனுக்கு தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறையினர் கோபாலனுக்கு சமீபத்தில் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதன்படி, கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், கோபாலன் நேற்று நேரில் ஆஜரானார். பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்ட அமலாக்கத் துறையினர், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

