புதிய குற்றவியல் சட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்: அமித்ஷா பெருமிதம்
புதிய குற்றவியல் சட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்: அமித்ஷா பெருமிதம்
ADDED : ஜூலை 01, 2024 02:15 PM

புதுடில்லி: புதிய குற்றவியல் சட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையில் பரவலான மாற்றத்தை கொண்டு வரும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன. இது குறித்து, ஆங்கில சேனலுக்கு அமித்ஷா அளித்த பேட்டி: சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அமலாகியுள்ள புதிய சட்டத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் மூலம் பெண்களை குற்ற சம்பவங்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
புறக்கணிப்பது தீர்வல்ல
அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப புதிய குற்றவியல் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய சட்டம் தொடர்பாக, விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. பார்லிமென்டில் விவாதத்தை புறக்கணிப்பது தீர்வல்ல. விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும். புதிய சட்டம் தொடர்பாக 6 லட்சத்திற்கு அதிகமான போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் சிறை
கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைமுறைகளை இணைய வழியில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜிய எப்.ஐ.ஆர்., முறை மூலம் காவல்நிலைய எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும். சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
வாக்குமூலம்
தவறான வாக்குறுதி கொடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தனி குற்றம் வரையறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குடும்பத்தினர் முன்னிலையில் பெண் அதிகாரி வாக்குமூலம் பெறுவார். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளை சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.
அரசியல் செய்யாமல் ஆதரியுங்கள்!
அரசியல் செய்யாமல் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். விரைந்து விசாரணை, நீதி, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்கான பாதுகாப்பை புதிய சட்டம் தரும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.