பெண்களுக்கான வேலைவாய்ப்பு இரட்டிப்பாக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
பெண்களுக்கான வேலைவாய்ப்பு இரட்டிப்பாக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
ADDED : ஆக 26, 2025 08:52 PM

புதுடில்லி: கடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு விதிதம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அறிக்கை:
கடந்த 7 ஆண்டுகளில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, 2017-18 ல் 22 சதவீதமாக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் , 40.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2017-18ல் 5.6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், 2023-24ல் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இது பெண்களுக்கான வேலைவாய்ப்புகளில் நேர்மறையான வளர்ச்சியை பிரதிபலிப்பதை காட்டுகிறது.
2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற தொலைநோக்கு இலக்கை அடைவதற்கான முக்கிய தூண்களில் ஒன்று, நாட்டில் 70 சதவீத பெண் தொழிலாளர் பங்களிப்பை உறுதி செய்வதாகும் .
இந்த மாற்றம் முக்கியமாக கிராமப்புறத்தில் இருப்பது இன்னும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அங்குள்ள பெண்களின் வேலைவாய்ப்பு 96 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் அங்குள்ள வேலைவாய்ப்பு 43 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெண் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 2013 இல் 42 சதவீதத்திலிருந்து 2024 இல் 47.53 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.