இந்தியாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி: உலக வங்கி அறிக்கையில் பாராட்டு
இந்தியாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி: உலக வங்கி அறிக்கையில் பாராட்டு
ADDED : ஏப் 27, 2025 01:09 AM

புதுடில்லி: வேலை பார்க்கும் வயதினர் தொகை உயர்வைவிட, இந்தியாவில் வேலைவாய்ப்புகள் வளர்ச்சி வேகமாக உள்ளதாக, உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை:
கடந்த 2021 - 22 நிதியாண்டில் இருந்து, இந்தியாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகவும் வேகமாக உள்ளது. வேலை பார்க்கும் வயதினர் தொகையின் வளர்ச்சியைவிட, இந்த வளர்ச்சி அதிக வேகமாக உள்ளது.
குறிப்பாக பெண்கள் வேலையில் சேருவது, தொடர்ந்து சீரான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
கடந்த 2024 - 25 நிதியாண்டின் முதல் காலாண்டில், நகர் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை சதவீதம், 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2017 - 18 ஆண்டில் இருந்து பார்க்கும்போது, இது மிகவும் குறைவாகும்.
கடந்த 2018 - 19ல் இருந்து பார்க்கும்போது, வேலைக்காக இடம் மாறுவதிலும் பெரும் மாற்றம் உள்ளது. குறிப்பாக, ஆண்கள் வேலை தேடி நகரங்களுக்கு செல்கின்றனர். கிராமப்புற பெண்கள், விவசாயம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்கின்றனர்.
அதே நேரத்தில், இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை, 13.3 சதவீதம் என்ற அளவில் அதிகமாக உள்ளது.
உயர்கல்வி முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, 29 சதவீதமாக உள்ளது. இது ஒருபக்கம் இருக்கையில், சுய வேலைவாய்ப்புகளை தேர்வு செய்வது அதிகரித்துஉள்ளது.
குறிப்பாக கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் பெண்கள், சுயதொழில் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பெண்கள் வேலைக்குச் செல்வது, 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், பாலின பாகுபாடு தொடர்கிறது. பெண்களைவிட, வேலை பார்க்கும் ஆண்கள் எண்ணிக்கை, 23.4 கோடி அதிகமாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.