ADDED : ஏப் 14, 2025 04:10 AM

பெங்களூரு : கர்நாடக மாநிலம் கொப்பாலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஹூப்பள்ளி பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினமும் தன், 5 வயது பெண் குழந்தையுடன் வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலை வழக்கம் போல வீட்டு வேலைக்கு வந்தார். தன் குழந்தையை வீதியில் விளையாட விட்டு, வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். விளையாடி கொண்டிருந்த சிறுமியை, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சாக்லேட் கொடுத்து துாக்கி சென்று அருகில் இருந்த ஷெட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளார். சத்தத்தை கேட்ட சிலர் ஷெட்டிற்குள் சென்று பார்த்தபோது, சிறுமி இறந்து கிடந்தார். கூட்டத்தினரை பார்த்ததும் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். ஆத்திரமடைந்த அப்பகுதியினர், போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், சிறுமியை வாலிபர் துாக்கி செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. விசாரணையில், அந்த நபர் பீஹாரை சேர்ந்த ரித்தேஷ் குமார், 35, என்றும், அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
அப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ரித்தேஷ் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்நபர், போலீசாரை கற்களால் தாக்க துவங்கினார்.
இதனால், எஸ்.ஐ., அன்னபூர்ணா அவரது காலிலும், முதுகிலும் சுட்டார். இதில், ரித்தேஷ் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள், குற்றவாளி, 'என்கவுன்டர்' செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.