ADDED : நவ 19, 2024 06:32 AM
பெங்களூரு: வக்பு வாரிய விவகாரம், மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்க, அரசு தயாராகி வருகிறது.
வக்பு வாரிய சொத்து விவகாரம், தற்போது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நிலங்களை, தனக்குரிய சொத்து என வக்பு வாரியம் அவசர அவசரமாக நோட்டீஸ் அனுப்பியதால், விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். இந்த விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கிறது.
மீட்க திட்டம்
இதற்கிடையில் கோவில்கள், மடங்களின் சொத்துகள் மீது, வக்பு வாரியம் கண் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தன் சொத்துக்களை பாதுகாக்க, ஹிந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீட்க அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து முடிவானது.
இதன்படி அறநிலையத்துறை கமிஷனர், 'கோவில்களின் நிலத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெரும்பாலான இடங்களில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகள், கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். முதற்கட்டமாக அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துகளை ஆய்வு செய்து, வேலி அமைத்து பாதுகாக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சொத்து என்ன?
பின், ஆக்கிரமிப்பை அகற்றி, கோவில் நிலத்தை மீட்பதற்கான சட்டப் போராட்டம் தொடர்பான ஆவணங்களை ஒருங்கிணைக்க கமிஷனர் பரிந்துரைத்துள்ளார். ஓரிரு மாதங்களில் கோவில்களின் சொத்துக்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து துல்லியமான தகவல்கள் கிடைக்கும்.
நடப்பாண்டு மார்ச் வரை, மாவட்ட கலெக்டர்கள், கோவில் செயல் அலுவலர்கள் அலுவலகம் மூலம், அசையா சொத்துக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
துறைக்கு சொந்தமான 'ஏ' பிரிவில் வரும் 205 கோவில்களின் மொத்த அசையா சொத்துக்கள் 6,323 ஏக்கர்; 'பி' பிரிவில் வரும் 193 கோவில்களின் மொத்த அசையா சொத்துகள் 1,500 ஏக்கர் என தெரிய வந்துள்ளது.
பெங்களூரு கிராமப்புறங்களில் உள்ள 'ஏ', 'பி' பிரிவு கோவில்களின் 1,037.56 ஏக்கர் அசையா சொத்துக்கள் உள்ளன.
பெலகாவியில் 1,164.35 ஏக்கர்; பெங்களூரு நகரில் 140; ராய்ச்சூரில் 1,102; கலபுரகியில 216, பீதரில் 186 ஏக்கர்; சாம்ராஜ்நகரில் 104.30 ஏக்கர்; மைசூரில் 506.09 ஏக்கர்; துமகூரில் 276 ஏக்கர்; சிக்கபல்லாபூரில் 230 ஏக்கர்; சிக்கமகளூரில் 126 ஏக்கர்.
மாண்டியாவில் 120 ஏக்கர்; ராம்நகரில் 105 ஏக்கர்; ஷிவமொக்காவில் 67.17 ஏக்கர் உட்பட பல மாவட்டங்களில், அசையா சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்துடன், 'ஏ' பிரிவில் 30 கோவில்களும்; 'பி' பிரிவில் 12 கோவில்களும், 'சி' பிரிவில் 201 கோவில்கள் என, 243 கோவில்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மீதமுள்ள கோவில்களின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.