எடியூரப்பா குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி: எத்னால் ஆவேசம்
எடியூரப்பா குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி: எத்னால் ஆவேசம்
ADDED : பிப் 05, 2025 09:45 PM

- நமது நிருபர் -
''லிங்காயத் தலைவர்கள் அரசியல் வாழ்க்கையை எடியூரப்பா முடித்து விட்டார்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பகீர் தகவல் கூறினார்.
டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எங்கள் அணியின் சிலர் நேற்று (முன்தினம்) மத்திய அமைச்சர்கள், கட்சியின் தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷை சந்தித்து பேசி உள்ளனர். இன்று லிங்காயத் தலைவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து லிங்காயத்துகளும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக இல்லை. விஜயேந்திராவை தலைவர் ஆக்கியதை நாங்கள் எதிர்க்கிறோம். எடியூரப்பா கையெழுத்தை விஜயேந்திரா போலியாக போட்டு உள்ளார்.
ஆனால், இதை பற்றி விசாரிப்பதற்கு சித்தராமையாவுக்கு என்ன பயம். சமரச அரசியல் செய்வது தான் காரணம்.
எடியூரப்பா ஏற்கனவே பல லிங்காயத் தலைவர்கள் அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டார். மீதம் இருக்கும் தலைவர்களையும் அரசியல் ரீதியாக அழிக்க பார்க்கிறார்.
நாங்கள் மூன்று விஷயங்களை கட்சி மேலிட கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஹிந்துக்கள் கொல்லப்பட்ட போது எடியூரப்பா என்ன செய்தார்.
அவரது குடும்பத்திற்கு எதிராக உருவாகி உள்ள எங்கள் அணியில் குடும்ப அரசியல் இல்லை. சித்தேஸ்வரும், அரவிந்த் லிம்பாவளியும் தங்கள் இடங்களை கொடுத்து விட்டனர்.
காங்கிரஸ் ஆதரவில் தான் விஜயேந்திரா எம்.எல்.ஏ., ஆனார். அது சிவகுமாரின் ஆசிர்வாதத்தால் நடந்தது.
ரமேஷ் ஜார்கிஹோளி, யோகேஸ்வரால் தான் பா.ஜ., ஆட்சி அமைந்தது. விஜயேந்திரா எதுவும் இல்லை. ஸ்ரீராமுலு தற்போது எங்களுடன் உள்ளார்.
பணத்தால் அனைவரையும் விலைக்கு வாங்கலாம் என்று, எடியூரப்பா, விஜயேந்திரா நினைக்கின்றனர். உங்களிடம் பணம் இருக்கலாம். ஆனால் பண்பு இல்லை. நான் தலைவர் ஆக முயற்சி செய்யவில்லை.
எங்கள் அணியில் யார் வேண்டும் என்றாலும் தலைவர் ஆகலாம். எடியூரப்பாவுக்கு வயதாகி விட்டது. பேரக் குழந்தைகளை பார்த்து கொண்டு அமைதியாக இருந்தால் 100 ஆண்டுகள் வாழலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.