sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'முடா' அலுவலகத்தில் அமலாக்க துறை 'ரெய்டு!' : அரசியல் காழ்ப்புணர்ச்சி என காங்., ஆவேசம்

/

'முடா' அலுவலகத்தில் அமலாக்க துறை 'ரெய்டு!' : அரசியல் காழ்ப்புணர்ச்சி என காங்., ஆவேசம்

'முடா' அலுவலகத்தில் அமலாக்க துறை 'ரெய்டு!' : அரசியல் காழ்ப்புணர்ச்சி என காங்., ஆவேசம்

'முடா' அலுவலகத்தில் அமலாக்க துறை 'ரெய்டு!' : அரசியல் காழ்ப்புணர்ச்சி என காங்., ஆவேசம்


ADDED : அக் 18, 2024 11:11 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு, 'முடா' அலுவலகம், தாலுகா அலுவலகம், முதல்வரின் மைத்துனருக்கு நிலத்தை விற்ற தேவராஜுவின் வீடு என மூன்று இடங்களில், அமலாக்கத் துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. நள்ளிரவை தாண்டியும் சோதனை நீடித்தது. 'முடா' அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசியல் மைசூரு:காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சோதனை நடப்பதாக காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரம், 'முடா'வில் முக்கிய ஆவணங்கள் மாயமாகி விட்டதாக பா.ஜ.,வினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

'முடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் முறைகேடு செய்ததாக, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்திருந்தார்.

கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி மற்றும் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலம் விற்பனையாளர் தேவராஜு ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

லோக் ஆயுக்தா


இவர்களில், மல்லிகார்ஜுன சுவாமி, தேவராஜு ஆகியோரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. முதல்வர் மற்றும் அவரது மனைவியிடம் இன்னும் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தவில்லை. பிரச்னையை அறிந்த முதல்வரின் மனைவி, 14 மனைகளையும் முடாவிற்கே திருப்பி வழங்கி விட்டார்.

இதற்கிடையில், இந்த முறைகேட்டில் பல கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளதால், அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அவரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆவணங்களை பெற்று பரிசீலனை நடத்தினர்.

இதற்கிடையில், முதல்வர் உத்தரவின்படி, இரண்டு நாட்களுக்கு முன் தான், 'முடா' தலைவர் மரிகவுடா திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மைசூரில் உள்ள 'முடா' அலுவலகம், தாலுகா அலுவலகம், கெங்கேரியில் உள்ள தேவராஜு வீடு ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

20 அதிகாரிகள்


முடா அலுவலகத்தில், 20 அதிகாரிகள் குழு உள்ளே நுழைந்து, யாரும் உள்ளே செல்லாத வகையில், அலுவலகத்தின் கேட்டை பூட்டியது. முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்புக்கு பதில், சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீசார் 12 பேர், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காலை 10:50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு சென்றதும், அங்கிருந்த முடா அதிகாரிகள் அனைவரின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்ததாக தெரியவந்துள்ளது. தாங்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் என்றும், இரண்டு நாட்கள் சோதனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின், அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு, முறைகேடு ஆவணங்களை ஒவ்வொரு மூலையையும் விடாமல் தேடினர். அமலாக்கத் துறை அதிகாரிகளின் தேடல் மற்றும் விசாரணையை பார்த்து, முடா அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறியதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

கமிஷனர் திணறல்


முடா கமிஷனர் ரகுநந்தனிடம், அமலாக்கத் துறையினர் 41 கேள்விகளை கேட்டுள்ளனர். ஆனால், சமீபத்தில் தான் இந்த பொறுப்புக்கு வந்தேன், தனக்கு எதுவும் தெரியாது என்றே பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். சரியாக பதில் அளிக்காமல் திணறியுள்ளார்.

மதியம் ஹோட்டலில் இருந்து உணவு வரவழைத்து, அங்கேயே சாப்பிட்டனர். இன்றும் சோதனை தொடர்ந்து நடக்கிறது. இது போன்று, மைசூரு தாலுகா அலுவலகத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆவணங்களை பரிசீலனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

கெங்கேரியில், தேவராஜு வீட்டில் சோதனை நடத்திய போது, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மைசூரு கெசரே கிராமத்தில், 3.16 ஏக்கர் நிலத்தை, முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமிக்கு விற்றதாக கூறியுள்ளார். மற்றபடி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அவசர ஆலோசனை


இது குறித்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறுகையில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பா.ஜ.,வினர் அமலாக்கத் துறையை ஏவி உள்ளனர்,'' என்று குற்றஞ்சாட்டினார்.

இதற்கு, கிருஷ்ணராஜா தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா கூறுகையில், ''முடா அலுவலகத்தில், ஆவணங்களை தேடினால், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்காது. நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ், அனைத்து ஆவணங்களையும், ஹெலிகாப்டரில் கொண்டு சென்று விட்டார்,'' என்றார்.

அமலாக்கத்துறை சோதனை நடப்பதை அறிந்த அமைச்சர் பைரதி சுரேஷ், அவசர அவசரமாக பெங்களூரு விதான் சவுதாவுக்கு வந்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்தினார். தற்போதைய தகவல்படி, முதல்வருக்கு விரைவில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

முடா முறைகேடு குறித்து, லோக் ஆயுக்தா விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வர வாய்ப்பில்லை. அமலாக்கத்துறை விசாரணையில் என்ன வரும் என்று பார்க்கலாம். விசாரணை நடத்தும்படி நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள லோக் ஆயுக்தாவால், எப்படி உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

- குமாரசாமி

மத்திய அமைச்சர், கனரக தொழில்கள் துறை

முடாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால், அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவர். அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுப்பர். சோதனை நடத்தவில்லை. ஆவணங்கள் பரிசீலனை செய்கின்றனர். சில ஆவணங்களை பெறுவதற்கு சென்றுள்ளனர்.

- பைரதி பசவராஜ்

அமைச்சர், நகர வளர்ச்சி துறை

அமலாக்கத்துறை அதிகாரிகள் முடாவுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம், நேற்று என, இரண்டு நாட்கள் ஆவணங்கள் பரிசீலனை செய்தனர். அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் வழங்கப்படும்.

-பிரசன்னகுமார்

செயலர், 'முடா'

முதல்வரின் மனைவி உட்பட 1,200க்கும் அதிகமான மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறைக்கு புகார் சென்றுள்ளது. 3,000 முதல், 4,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதால், சோதனை நடத்துகின்றனர். இதில், அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பா.ஜ., அல்லது மத்திய அரசின் தலையீடு இல்லை.

-அசோக்,

எதிர்க்கட்சி தலைவர், சட்டசபை

முதல்வர் சித்தராமையா, அமைச்சர் பைரதி சுரேஷ் இவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு, இருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஹெலிகாப்டரில் ஆவணங்கள் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. அந்த ஆவணங்கள் எங்கே இருக்கின்றன என்பதை தெரிவிக்க வேண்டும்.

- சலவாதி நாராயணசாமி

எதிர்க்கட்சி தலைவர், மேல்சபை

அமலாக்கத்துறை சோதனை மூலம், என் போராட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. முதல்வர் அல்லது அவரது மனைவி மீது குறி வைத்து புகார் அளிக்கவில்லை. முடாவில் நடக்கும் ஊழல் குறித்து வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவே புகார் அளிக்கப்பட்டது. முடா முறைகேடு வழக்கிற்கு, ஒரு முடிவு கட்டும் வரை விட மாட்டேன்.

-ஸ்நேகமயி கிருஷ்ணா

சமூக ஆர்வலர், மைசூரு

ரூ.1,000 கோடி நஷ்டம்?

முடா முறைகேடு விஷயம் தொடர்பாக, முதல்வர் மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கியதால், அரசுக்கு குறிப்பிட்ட அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக, மைசூரு கலெக்டர், நகர வளர்ச்சி துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், எவ்வளவு நஷ்டம் என்ற இடத்தில் மட்டும், 'ஒயிட்னர்' போட்டு அழிக்கப்பட்டிருந்தது. அதன் நகல் நேற்று டிவிக்களில் வெளியானது. ஒயிட்னர் போடப்பட்ட இடத்தில், 1,000 கோடி நஷ்டம் என்று குறிப்பிட்டிருந்தது.








      Dinamalar
      Follow us