'ஐ - பேக்' நிறுவன அலுவலகங்களில் அமலாக்க துறை மீண்டும் சோதனை
'ஐ - பேக்' நிறுவன அலுவலகங்களில் அமலாக்க துறை மீண்டும் சோதனை
ADDED : ஏப் 03, 2026 01:12 AM
புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியைச் சேர்ந்தவர் லாலா எனப்படும் அனுப் மாஜி. இவர், மாநிலத்தில் நடந்த லட்சக்கணக்கான மெட்ரிக் டன் நிலக்கரி கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என, சி.பி.ஐ., 2020ல் வழக்கு பதிந்தது.
இவர் தலைமையிலான கும்பல் மேற்கு வங்கத்தில், 'ஈஸ்டர்ன் கோல்பீல்ட்' நிறுவனத்தில் இருந்து பல ஆண்டுகளாக 31 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி திருடியதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுத்துறை நிறுவனமான, 'கோல் இந்தியா'வுக்கு 1,340 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ., மதிப்பிட்டுள்ளது.
சி.பி.ஐ., வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. நிலக்கரி கடத்தல் பணத்தில் 10 கோடி ரூபாய், 'ஐ - பேக்' நிறுவனத்துக்கு கைமாறியதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த, 'ஐ - பேக்' நிறுவனம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணியை செய்கிறது.
கடந்த ஜனவரியில் கொல்கட்டாவில் உள்ள, 'ஐ - பேக்' நிறுவனத்தின் அலுவலகம், அதன் இயக்குநர் பிரதீக் ஜெயினின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது, பிரதீக் ஜெயின் வீட்டிற்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, கட்சியின் தேர்தல் உத்தியை தெரிந்துகொள்ள அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, சில ஆவணங்களை எடுத்துச் சென்றார்.
இதன் தொடர்ச்சியாக, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டில்லி ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில், 'ஐ - பேக்' அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
பெங்களூரில் உள்ள, 'ஐ - -பேக்' நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் ரிஷி ராஜ் சிங் வீடும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டது.
