டில்லியில் ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டுக்கு சென்ற அமலாக்க துறை
டில்லியில் ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டுக்கு சென்ற அமலாக்க துறை
ADDED : ஜன 29, 2024 11:41 PM

புதுடில்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, புதுடில்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு அமலாக்கத் துறையினர் நேற்று சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லாததால், இரவு வரை அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர்.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு குறித்து, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, மாநில சமூக நலத்துறை இயக்குனராகவும், ராஞ்சி துணை கமிஷனராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட, 14 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறையினர் அனுப்பிய ஏழு சம்மன்களை புறக்கணித்த முதல்வர் ஹேமந்த் சோரன், எட்டாவது சம்மனுக்கு பதிலளித்தார்.
அதன்படி, கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள வீட்டில், அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏழு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, ஜன., 29 அல்லது 30ல், ஏதாவது ஒரு நாளில் விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பினர். இதற்கிடையே அவர், ராஞ்சியில் இருந்து தலைநகர் புதுடில்லிக்கு கடந்த 27ம் தேதி சென்றார்.
இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக, புதுடில்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத் துறையினர் சென்றனர்.
ஆனால், அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து, நேற்று இரவு வரை அதிகாரிகள் அங்கேயே காத்திருந்தனர்.
இதற்கிடையே, நாளை விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத் துறைக்கு ஹேமந்த் சோரன் தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.