ADDED : ஜன 05, 2024 04:48 AM

மாதநாயக்கனஹள்ளி,: குடகு மடிகேரி முகதாலு கிராமத்தைச் சேர்ந்தவர் தம்மய்யா, 50. இவர் தனது குடும்பத்துடன் 15 ஆண்டுகளாக, பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி பவானிநகரில் வசித்து வருகிறார்.
தம்மய்யா மகன் விசு உத்தப்பா, 19. தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, விசு உத்தப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டில் இருந்த இரட்டை குழல், துப்பாக்கியை எடுத்து நெஞ்சில் சுட்டார். அவரது நெஞ்சில் குண்டு துளைத்தது.
கதறி அழுத பெற்றோர்
இதன் பின்னர், தந்தை தம்மய்யாவிடம் மொபைல் போனில் பேசிய அவர், துப்பாக்கியால் சுட்டு கொண்டது பற்றி கூறினார். அதிர்ச்சி அடைந்த தம்மய்யா வீட்டிற்கு, விரைந்து வந்தார். உயிருக்கு போராடிய மகனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முன்தினம் இரவு விசு உத்தப்பா உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
உரிமம் பெற்ற துப்பாக்கி
சம்பவம் குறித்து பெங்களூரு ரூரல் எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதண்டி நேற்று அளித்த பேட்டி:
தற்கொலை செய்த விசு உத்தப்பாவின் தந்தை தம்மய்யா, நைஸ் எனும் நந்தி இன்பிராஸ்டக்சர் காரிடர் சாலை நிறுவனத்தில், காவலாளியாக வேலை செய்கிறார். உரிமம் பெற்று, இரட்டை குழல் துப்பாக்கி வைத்து உள்ளார். சரியாக படிக்காததால் விசு உத்தப்பாவை, அவரது தாய் திட்டி உள்ளார்.
இதனால், அவர் தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிந்து உள்ளது. அவரது அறையில் இருந்து, கடிதம் எதுவும் சிக்கவில்லை. பெற்றோரிடம் விசாரித்து தகவல் பெற்று உள்ளோம். வேறு எதுவும் காரணமா என்ற, கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.