ADDED : பிப் 22, 2024 01:06 AM
பெங்களூரு,
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், மிக முக்கிய கட்டமான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்ததாக, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விண்வெளி துறையில் தொடர்ந்து பெரும் சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், ராக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் சி.இ., -- 20 என்ற இன்ஜின் சோதனை, தமிழகத்தின் நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ பரிசோதனை மையத்தில் நேற்று நடந்தது.
இதில், இந்த இன்ஜினின், 'ஹியூமன்ரேட்டட்' எனப்படும், எந்த இடத்தில் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கு தீர்வு காணும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ கூறியுள்ளது.
பல்வேறு சீதோஷ்ண நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜினின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஏழாவது சோதனை இதுவாகும். இதனுடன் இன்ஜின் தொடர்பான அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.