ADDED : ஜன 19, 2026 02:19 AM
நொய்டா: கட்டுமான தளத்தில் தண்ணீர் தேங்கியிருந்த 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து, சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்தார்.
டில்லி அருகே கிரேட்டர் நொய்டா 150வது செக்டார் டாடா யுரேகா பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் யுவராஜ் மேத்தா, 27. ஹரியனா மாநிலம் குருகிராம் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தார்.
நேற்று முன் தினம் அதிகாலை 12:15 மணிக்கு காரில் வீடு திரும்பினார். தன் வீட்டுக்கு சற்று தூரத்துக்கு முன், கட்டுமான தளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்த 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 4:00 மணிக்கு யுவராத் மேத்தா உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பனிமூட்டம் மற்றும் அதிக வேகம் காரணமாக, கார் வடிகாலைக் கடந்து பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது.
நொய்டா ஆணையத்தின் அலட்சியத்தால் ஒரு வாலிபர் உயிரிழந்து விட்டார் என குற்றம்சாட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். வடிகால் அருகே தடுப்புகள் மற்றும் பிரதிபலிப்பான் அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் மவுனமாக இருப்பதாக கூறினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
மற்றொரு விபத்து ஹரியானா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்ட்டை சேர்ந்தவர் சிம்ரன் சிங். இவரது மனைவி ஆகான்ஷா.
இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. யமுனா நகர் மாவட்டம் ஜகத்ரி கிராமத்துக்கு இருவரும் நேற்று அதிகாலை காரில் சென்றனர்.
அம்பாலா மாவட்டம் சஹா கிராமம் அருகே, சாலை தடுப்பில் கார் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிம்ரன் சிங் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
ஆகான்ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடர்ந்த பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

