சிரியாவின் இடைக்கால பிரதமரானார் இன்ஜினியர் முஹமது அல் - பஷீர்
சிரியாவின் இடைக்கால பிரதமரானார் இன்ஜினியர் முஹமது அல் - பஷீர்
UPDATED : டிச 12, 2024 05:07 AM
ADDED : டிச 12, 2024 02:20 AM

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தால் முன்னாள் அதிபர் பஷர் அல் - ஆசாத் ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, அந்நாட்டின் இடைக்கால பிரதமராக முஹமது அல் - பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் பஷார் அல் - ஆசாத்துக்கும், சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும், மோதல் போக்கு நிலவியது.
கடந்த 13 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு போரின் உச்சகட்டமாக, ஹெச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி முதல் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதன் விளைவாக, அலெப்பா, ஹாம்ஸ், டாரா, குனேத்ரா, சுவேடா மற்றும் டமாஸ்கஸ் நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்த அதிபர் பஷர் அல் - ஆசாத், கடந்த 8ம் தேதி நாட்டைவிட்டு வெளியேறினார்.
மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்துஉள்ளார்.
போர்பதற்றம் தணிந்ததை அடுத்து, முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்த சூழலில், சிரியாவின் இடைக்கால பிரதமராக இன்ஜினியர் முஹமது அல் - பஷீர், 41, நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அந்நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், ''சிரியா மக்கள் தற்போது ஸ்திரத்தன்மையையும், அமைதியையும் அனுபவிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி வரை இந்த இடைக்கால அரசு செயல்படும்,'' என்றார்.

