ADDED : டிச 15, 2024 11:47 PM

மாரத்தஹள்ளி: தற்கொலை செய்த இன்ஜினியரின் மனைவி, ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். அவரது தாய், சகோதரருடன் சேர்த்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. இவரது மனைவி நிகிதா சிங்கானியா, 32. இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் மகன் உள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூரு, மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக அதுல் சுபாஷ் பணியாற்றினார்.
குடும்ப தகராறில் கணவரும், மனைவியும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு, அதுல் சுபாஷ் தான் வசித்த வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் 90 நிமிட வீடியோவை, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் ஆகியோரால், தான் சந்தித்த அவமானங்கள், சித்ரவதைகள் பற்றி உருக்கமாக பேசி இருந்தார்.
உத்தர பிரதேச நீதிமன்றங்களில் தன் மீது, மனைவி ஒன்பது பொய் வழக்குகள் போட்டு இருப்பதாகவும், அவற்றில் ஒரு வழக்கை தீர்த்து வைக்க, பெண் நீதிபதி லஞ்சம் கேட்டதாகவும் கூறி இருந்தார். அதுலின் தற்கொலை, நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நிகிதா, நிஷா, அனுராக்கை தேடி, உத்தர பிரதேசத்திற்கு மூன்று தனிப்படை போலீசார் சென்றனர்.
கடந்த 12ம் தேதி இரவு நிஷா, அனுராக் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஒரு தனிப்படை போலீசார், பெங்களூரு அழைத்து வந்து விசாரித்தனர்.
தலைமறைவாக இருந்த நிகிதா, நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம், குருகிராமில் கைது செய்யப்பட்டார். நேற்று அவர் பெங்களூரு அழைத்து வரப்பட்டார்.
நிகிதா, நிஷா, அனுராக்கை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.