ADDED : ஜன 17, 2025 06:49 AM

புதுடில்லி: இங்கிலாந்து மண்ணில் மூன்று பயிற்சி போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20-24ல் லீட்சில் நடக்கும். அடுத்த நான்கு போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2-6), லார்ட்ஸ் (ஜூலை 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), ஓவலில் (ஜூலை 31-ஆக. 4) நடக்க உள்ளன.
சமீபத்தில் நியூசிலாந்து (0-3), ஆஸ்திரேலியாவுக்கு (1-3) எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்தது இந்திய அணி. இதனால், இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் ரிஷாப் பன்ட், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர், ஜன. 23ல் துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளனர்.
தவிர, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடருக்கு முன், தலா 4 நாள் கொண்ட, மூன்று பயிற்சி போட்டியில் பங்கேற்க இந்தியா முடிவு செய்துள்ளது. போட்டி நடக்கும் இடம், தேதி இன்னும் முடிவாகவில்லை. வரும் மே 25ல் ஐ.பி.எல்., பைனல் முடிந்ததும் இதுகுறித்து முழு விவரம் தெரியவரும்.
இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஒருவர் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவில் இந்திய 'ஏ' அணி போட்டிகளில் பங்கேற்றது. இதுபோல இங்கிலாந்து மண்ணில் ஏற்பாடு செய்ய உள்ளோம். இதனால் அங்குள்ள சூழல், ஆடுகளத்துக்கு ஏற்ப வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.