ADDED : ஜன 26, 2025 10:33 PM

ஆமதாபாத்: ஆமதாபாத் இசை நிகழ்ச்சியின் போது பாடகர் கிறிஸ் மார்ட்டின் ஹிந்தியில் பேசி ரசிகர்களை கவர்ந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் மார்ட்டின், ஆங்கில பாடகர், பாடலாசிரியர் மற்றும் கோல்ட்ப்ளே இசைக்குழுவின் இசையமைப்பாளர் ஆவார். அவர் இந்தியா வந்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று 76வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிறிஸ் மார்ட்டின் ஹிந்தியில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பார்வையாளர்களை ஹிந்தியில் வரவேற்று குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்று கிறிஸ், ரசிகர்களிடம் குஜராத்தியில் பேசினார். இன்று அவர், உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். எங்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாய்ப்பளித்ததற்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஹிந்தியில் பேசி அசத்தினார்.
அவர் மேலும் பேசியதாவது:
குடியரசு தினத்தன்று இந்தியக் கொடியை அசைப்பது, அது அழகாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வர முயற்சித்ததற்கு மிக்க நன்றி. போக்குவரத்து நெரிசல், ஹோட்டல்கள், டிக்கெட் வரிசைகள் மற்றும் நீங்கள் கடந்து செல்ல வேண்டிய அனைத்து நெருக்கடிக்கு இடையில் இங்கு வருவது கடினம் என்பதை நான் அறிவேன்.
இந்த அற்புதமான நாளை எங்களுக்கு வழங்க முயற்சித்ததற்கு நன்றி. உங்கள் அழகான நாட்டிற்கு எங்களை வரவேற்றதற்கு நன்றி. இந்தியாவுக்காக இசை நிகழ்ச்சி அனுமதித்ததற்கு நன்றி.
நாங்கள் இங்கே சிறந்த நேரத்தை அனுபவிக்கிறோம். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இவ்வாறு கிறிஸ் மாட்டின் பேசினார்.

