ADDED : அக் 02, 2024 01:22 AM

புதுடில்லி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக் தலைநகர் லேவில் இருந்து, 'டில்லி சலோ' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் துவக்கினார். இவருடன், 120 பேர் பங்கேற்றனர்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குதல், இங்குள்ள பழங்குடியினரை பாதுகாக்கும் வகையில், லடாக்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டப்பிரிவின் கீழ் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த பேரணி நடத்தப்பட்டது.
டில்லி எல்லையான சிங்கு பகுதியை வந்தடைந்த சோனம் உள்ளிட்ட 120 பேரையும், போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அவர்களை பவனா, நரேலா, அலிபூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் அடைத்தனர்.
பவனா போலீஸ் ஸ்டேஷனில் அடைக்கப்பட்ட சோனமை, வக்கீல்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கோரிக்கையை வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷன்களிலேயே சோனம் உள்ளிட்டோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
