சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 2 லட்சம் மாணவர் பிரசாரம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 2 லட்சம் மாணவர் பிரசாரம்
ADDED : மே 24, 2025 12:17 AM
புதுடில்லி:“தேசிய தலைநகர் பிராந்தியத்தில், இரண்டு லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவர்,”என, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.
டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, நிருபர்களிடம் கூறியதாவது:
டில்லி மாநகர் முழுதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் இரண்டு லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவர். இந்த திட்டத்துக்கு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான, 'தெரி' நிறுவனத்துடன், டில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில் 2,000 சுற்றுச்சூழல் கிளப் துவக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த தெரி நிறுவனத்துக்கு 40 லட்சம் ரூபாய் டில்லி அரசு வழங்கும்.
இது வெறும் விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டுமல்ல. சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த இயக்கம் வாயிலாக டில்லிக்கு இரண்டு லட்சம் சுற்றுச்சூழல் போராளிகள் கிடைப்பர். இந்த மாணவ சுற்றுச்சூழல் போராளிகள் டில்லி மற்றும் நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பல்லுயிரியலை ஊக்குவித்து பாதுகாப்பர்.
ஜூன் முதல் நவம்பர் 2025 வரை நடக்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், கதை சொல்லல், நடைமுறை சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், விளையாட்டுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான தொடர்பு கருவி பயன்பட்டு ஆகியவை அடங்கும்.
இந்த திட்டத்தின் முக்கிய அங்கமாக, 80 சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.