வி.வி.புரத்தில் புறாக்களால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு
வி.வி.புரத்தில் புறாக்களால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு
ADDED : அக் 13, 2024 11:12 PM

பெங்களூரு: வி.வி.புரம் பகுதியில் முகாமிட்டுள்ள புறாக்கள் கூட்டத்தால், அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். இங்கு துர்நாற்றம் வீசுகிறது.
பெங்களூரின் வி.வி.புரம், பிரபலமான பகுதியாகும். இங்குள்ள சஜ்ஜன் ராவ் சதுக்கம் அருகில் ஆயிரக்கணக்கான புறாக்கள் முகாமிட்டுள்ளன. பொதுமக்கள் புறாக்களுக்கு தீவனம் போடுகின்றனர். இவர்கள் போடும் உணவால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த சாலையில் நடமாடுவோர், மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பொது இடங்களில் விலங்குகள், பறவைகளுக்கு தீவனம் போடக்கூடாது என, பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த விதிகள் மீறப்படுவது தெரிந்தும், மவுனமாக வேடிக்கை பார்ப்பதாக, அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
புறாக்களின் எச்சத்தால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்துள்ளது. மக்களுக்கு ஆஸ்துமா, மூச்சு திணறல் என, பல உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. புறாக்களுக்கு தீவனம் போட்டால், அபராதம் விதிப்பதாக மாநகராட்சி எச்சரித்தும் பயன் இல்லை. மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.