ஆதார் இல்லாமல் யு.ஏ.என்., உருவாக்க இ.பி.எப்.ஓ., அமைப்பு புதிய வசதி
ஆதார் இல்லாமல் யு.ஏ.என்., உருவாக்க இ.பி.எப்.ஓ., அமைப்பு புதிய வசதி
ADDED : ஏப் 26, 2025 03:25 AM

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தங்களது பி.எப்., கணக்கை மாற்றுவதற்கு, புதிதாக படிவம் - 13 உடன், நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை உள்ளீடு செய்யாமல், யு.ஏ.என்., எண்ணை உருவாக்கி கொள்வதற்கான வசதியை இ.பி.எப்.ஓ., அறிமுகப்படுத்தி உள்ளது.
வேலை மாறினால், பி.எப்., கணக்கை தொழிலாளர்களே மாற்றிக்கொள்ளும் வசதியை கடந்த ஜனவரியில் இ.பி.எப்.ஓ., அறிமுகப்படுத்தியது. முன்னதாக, பி.எப்., கணக்கை, பழைய அலுவலகத்தில் இருந்து, புதிய அலுவலகத்துக்கு மாற்றுவதில், தேவையற்ற தாமதத்துடன், உறுப்பினர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.
இ.பி.எப்.ஓ., அறிக்கை:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய படிவம் - 13 வாயிலாக, பி.எப்., கணக்கை மாற்றுவதற்கு, புதிய அலுவலகத்தின் ஒப்புதல் நீக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, பழைய அலுவலகம் ஒப்புதல் அளித்தவுடன், பி.எப்., தொகையானது உடனடியாக உறுப்பினரின் தற்போது பணிபுரியும் புதிய அலுவலக கணக்கிற்கு மாறிவிடும்.
இதே போன்று, ஆதார் இன்றி, யு.ஏ.என்., உருவாக்குவதற்கு, நிறுவனங்களுக்கு இ.பி.எப்.ஓ., அனுமதி அளித்து உள்ளது. இதன்படி, உறுப்பினர் அடையாள எண் மற்றும் பிற விபரங்களை வைத்து, யு.ஏ.என்., எண்ணை உருவாக்கி கொள்வதோடு, ஆதார் உறுதிப்படுத்தல் இன்றி, உரிய நேரத்தில் புதிய கணக்கில் தொகையை செலுத்த முடியும்.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இது போன்ற அனைத்து யு.ஏ.என்., எண்களும், ஆதார் தகவல்களை அளித்து, வெற்றிகரமாக உறுதிப்படுத்தும் வரை, செயலற்ற நிலையில் இருக்கும்.
ஒருமுறை ஆதார் எண் உறுதிப்படுத்தல் முடிந்தவுடன், கணக்கு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். புதிய நடைமுறையால் மேலும், நேரடியாக 1.25 கோடி உறுப்பினர்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

