புதிதாக துவங்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு வேரோடு அழிப்பு!
புதிதாக துவங்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு வேரோடு அழிப்பு!
ADDED : அக் 23, 2024 06:14 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்ததை அடுத்து, போலீசார் பல்வேறு மாவட்டங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதிதாக துவங்கப்பட்ட பயங்கரவாத அமைப்பை கண்டுபிடித்த அவர்கள், அதை அடியோடு அழித்தனர்.
தொடர் கதை
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், அவர்களுக்கு நம் பாதுகாப்புப் படை பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், கந்தர்பால், பந்திபோரா, குல்காம், புத்காம், அனந்த்நாக், புல்வாமா ஆகிய மாவட்டங்களில், ஜம்மு - காஷ்மீர் காவல் துறையின் உளவுத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, 'தெஹ்ரீக் லாபிக் யா முஸ்லிம்' என்ற பயங்கரவாத அமைப்பு புதிதாக துவங்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அந்த அமைப்பின் நடவடிக்கைகளை முடக்கிய உளவுத் துறை அதிகாரிகள், அதை வேரோடு அழித்தனர்.
இது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீநகர், கந்தர்பால், பந்திபோரா உள்ளிட்ட மாவட்டங்களில், புதிய பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இந்த மாவட்டங்களில் நேற்று சோதனை நடத்தினோம்.
முற்றிலும் முடக்கம்
அப்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பாக, தெஹ்ரீக் லாபிக் யா முஸ்லீம் என்ற அமைப்பு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்ட அமைப்பாக இருந்தாலும், பயங்கரவாத நடவடிக்கையில் இளைஞர்களை அதிகளவில் சேர்த்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாபா ஹமாஸ் என்பவர் இந்த அமைப்பை நிர்வகித்துள்ளார். இவர், எல்லை தாண்டிய ஊடுருவல், நிதி அளித்தல், அமைப்புக்கு ஆட்சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு வேரோடு அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.