ஆர்.எஸ்.எஸ்., முயற்சி தோல்வி போட்டியில் ஈஸ்வரப்பா உறுதி
ஆர்.எஸ்.எஸ்., முயற்சி தோல்வி போட்டியில் ஈஸ்வரப்பா உறுதி
ADDED : மார் 19, 2024 06:32 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், மகனுக்கு சீட் கிடைக்காத விரக்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை, ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரமுகர் கோபால், அயோத்தியில் இருந்து தொடர்பு கொண்டு பேசியும், 'ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க முடியாது' என, திட்டவட்டமாக கூறிவிட்டார்.
பா.ஜ., சார்பில், ஹாவேரி லோக்சபா தொகுதியில், தன் மகன் காந்தேஷுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடும் கோபத்தில் உள்ளார்.
இதுகுறித்து, பெங்களூரில் ஈஸ்வரப்பா நேற்று கூறியதாவது:
பா.ஜ., மேலிடம் எடியூரப்பாவை நம்பி உள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. எம்.பி.,யாக அவர் மகன் ராகவேந்திரா பதவியில் இருக்கும்போதே, இளைய மகன் விஜயேந்திராவை எம்.எல்.ஏ.,வாக்கினார். அவரையே மாநில தலைவராக்கவும் செய்தார்.
'என் தந்தை பதவியில் இருக்கும் வரை, எம்.எல்.ஏ., - எம்.பி., தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என்பதில், என் மகன் உறுதியாக இருந்தார். ஆனால், 'மொத்த பா.ஜ.,வும் தன் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்' என, எடியூரப்பா விரும்புகிறார்.
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள், கட்சி இருக்கக் கூடாது என்பதே என்னை போன்றவர்களின் நோக்கம். இதை மேலிட தலைவர்களுக்கு புரிய வைப்பதற்காகவே, ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.
என் உடலில் ஓடும் ரத்தத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.,வும் மட்டுமே உள்ளனர். நான் கட்சிக்கு விரோதமாக செயல்படவில்லை. வெற்றி பெற்ற பின், பா.ஜ.,வில் இணைவேன். மோடியே என்னை அழைத்துப் பேசினாலும், அவருக்கு புரிய வைப்பேன்.
கட்சியில் இருந்து விலகி, கே.ஜே.பி., கட்சி துவங்கிய எடியூரப்பா, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு அவ்வளவு தான். இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், அயோத்தியில் இருந்து, மூத்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோபால், ஈஸ்வரப்பாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நேற்று சமாதான முயற்சி மேற்கொண்டார். ஆயினும், 'போட்டியில் இருந்து 'பின்வாங்க முடியாது' என, ஈஸ்வரப்பா திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதையடுத்து தான், ஷிவமொகாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து, ஈஸ்வரப்பா பெயர் நீக்கப்பட்டது.
கடந்த 2018ல் எனக்கும் வருணா தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. நடந்தும், சைக்கிளிலும் கிராமம், கிராமமாக சென்று எடியூரப்பா கட்சியை வளர்த்ததால், இன்று கர்நாடகாவில் பா.ஜ., பலமாக உள்ளது. கட்சியை யார் வளர்த்தது, யார் நெருக்கடி கொடுத்தது என்பது குறித்து, தேர்தலுக்கு பின் தெரியும். மேலிடம் அதிருப்தியை சரி செய்யும்.
-விஜயேந்திரா, மாநில தலைவர், பா.ஜ.,

