ADDED : பிப் 19, 2024 07:03 AM

ஹூப்பள்ளி: ராமர் கோவில் கட்டுவதால், ஏழ்மை ஒழியாது, என விமர்சித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாடுக்கு, பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பதிலடி கொடுத்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:
ராமர் கோவில் கட்டியதால், ஏழ்மை ஒழியாது. அரசியல் நோக்கில் ராமர் கோவிலை கட்டினர். கோவில் கட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டவில்லை. கோவில் பெயரை கூறி, ஏன் ஓட்டு கேட்கிறீர்கள்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், ராமர் கோவில் குறித்து, அதிகமாக பேசப்படுகிறது. பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததா. ஏழைகளுக்கு உதவும் ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாடு பின் தங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவருக்கு பதிலடி கொடுத்து, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஷிவமொகாவில் கூறியதாவது:
ராமர் கோவில் கட்டி முடித்த பின், காங்கிரஸ் தலைவர்கள் ஏதேதோ பேசுகின்றனர். இது தேசிய கோவில். இது பற்றி அமைச்சர் சந்தோஷ் லாட் பேசுவது சரியல்ல.
சிறுபான்மையினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பெயரை கூறி, காங்கிரசார் ஆட்சிக்கு வந்தனர். இந்த சமுதாயத்தினருக்கு, காங்கிரசால் நியாயம் கிடைக்கவில்லை. மோடி பிரதமரான பின், மூன்று பிரிவினருக்கும் நியாயம் கிடைத்தது. வரும் நாட்களில் சிறுபான்மையினர் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

