ADDED : ஜன 30, 2025 08:50 PM

பெங்களூரு ; ''என் கோஷ்டியில், தலைவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மாநில தலைவராக நான் தயார்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின் உண்மையான சாயம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எங்கள் குழு பெரிதாகிறது.
எங்களுடன் சேரும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மாநில தலைவர் பதவியை ஏற்க, 100 சதவீதம் நான் தயாராக இருக்கிறேன்.
மாநில தலைவர் தேர்வு விஷயத்தில், என்னென்ன செய்கின்றனர் என்பது, அனைவருக்கும் தெரியும். பா.ஜ.,வில் சுதாகர் மட்டுமின்றி, பல தலைவர்களும் வருத்தத்தில் உள்ளனர்.
இதற்கு கட்சி மேலிடம் பதிலளிக்க வேண்டும்.
விஜயேந்திராவுக்கு பண அகங்காரம் உள்ளது. முடா முறைகேடு விஷயத்தில் இவர் பாதயாத்திரை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
மைசூரை தொடுவதற்குள், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்.
விஜயேந்திரா பற்றிய அனைத்து விஷயங்களையும், சித்தராமையா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், தெரியும் சேதி.
ஆனால், சித்தராமையா வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை. அட்ஜெஸ்மென்ட் அரசியல் செய்கின்றனர்.
மாநில தலைவர் தேர்தல் குறித்து, நாளை (இன்று) ஆலோசனை நடத்துவோம். கட்சியை காப்பாற்றுவது குறித்து திட்டமிடுவோம்.
இரண்டு கட்டங்களில் ஆலோசனை நடத்துவோம். ஸ்ரீராமுலுவிடம் நான் பேசவில்லை. எங்கள் தலைவர்கள் பேசியுள்ளனர்.
எங்கள் கட்சி பலவீனமாக இல்லை. எடியூரப்பாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இவரை பற்றி மேலிடம் சிந்திக்க கூடும். கல்யாண கர்நாடகாவில் கட்சி பலவீனமாக உள்ளது. மேலிடம் இதை சரி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

