எத்தனால் பயன்பாடு: விவசாயிகளுக்கு ரூ.40,000 கோடி வருமானம் உண்டு
எத்தனால் பயன்பாடு: விவசாயிகளுக்கு ரூ.40,000 கோடி வருமானம் உண்டு
ADDED : ஆக 14, 2025 12:04 AM

புதுடில்லி: 'எத்தனால் 20 சதவீதம் உடைய, 'இ - 20' பெட்ரோலை பயன் படுத்துவதால், வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என, தவறான தகவல் பரவி வருகிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் அச்சமடைய வேண்டாம்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது .
ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயுக்களாக நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க எண்ணிய மத்திய அரசு, அதன் ஒரு பகுதியாக, 'எலக்ட்ரிக்' வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. மறுபுறம், நாடு முழுதும் பெட்ரோலில் எத்தனாலை கலந்து விற்பனை செய்து வருகிறது.
ஸ்பீடு குறையாது
துவக்கத்தில், 90 சதவீதம் பெட்ரோல் உடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல், அது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 'இ - 20' எனப்படும், இந்தவகை பெட்ரோலால் வாகனங்கள் பழுதடைவதாகவும், வாகனங்களுக்கான மைலேஜ் குறைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
'இ - 20' எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறுவதன் வாயிலாக, நம் நாட்டின் பருவநிலைக் குறிக்கோள்களை அடைவதற்கும், 2070ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும் இந்தியா உறுதிபூண்டு உள்ளது.
நிடி ஆயோக் நடத்திய எத்தனால் சுழற்சி உமிழ்வு ஆய்வின்படி, கரும்பு மற்றும் மக்காச்சோளம் அடிப்படையிலான எத்தனால் பயன்பாட்டில், பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் , பெட்ரோலைவிட முறையே 65 மற்றும் 50 சதவீதம் குறைவாக உள்ளன.
'இ - 20' பெட்ரோல் பயன்பாட்டால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என 2020லேயே குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை.
மைலேஜ் என்பது ஓட்டும் பழக்கம், வாகன பராமரிப்பு, டயரின் அழுத்தம் மற்றும் 'ஏசி' பயன்பாடு போன்ற பல காரணங்களுடன் சம்பந்தப்பட்டது.
தேய்மானமும் இல்லை
எத்தனால் பெட்ரோலை பயன்படுத்துவதால், வாகனங்கள் சிறந்த சீற்றத்தையும், சவாரி தரத்தையும் வழங்குகின்றன. இந்த வகை பெட்ரோல்கள் நவீன இன்ஜின்களுக்கு, புதிய வேகத்தையும், சிறந்த செயல்திறனையும் வழங்குகின்றன.
இந்த வகை பெட்ரோலால், வாகனங்களின் பாகங்களில் தேய்மானம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓட்டும் திறன், ஸ்டார்ட் ஆகும் திறன், உலோகம் இணக்கத்தன்மை, பிளாஸ்டிக் இணக்கத்தன்மை உள்ளிட்ட பெரும்பாலான அளவுகோல்களில் எந்தப் பிரச்னையும் இல்லை.
சில பழைய வாகனங்களில் மட்டுமே, எத்தனால் பெட்ரோலால் பிரச்னை ஏற்படுவது தெரிய வந்துள்ளது. இதற்கு, அந்தந்த வாகன பராமரிப்பே காரணம்.
அன்னிய செலாவணி
எத்தனால் கலந்த பெட்ரோலால் 245 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளது. 736 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் - டை - ஆக்சைடு உமிழ்வு குறைப்பு ஏற்பட்டுள்ளது.
இது, 30 கோடி மரங்களை நடுவதற்கு சமம். 20 சதவீத எத்தனால் கலப்பால், இந்தாண்டு மட்டும் விவசாயிகளுக்கு, 40,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.
அன்னிய செலாவணி சேமிப்பு மட்டும் 43,000 கோடி ரூபாயாக இருக்கும். பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகள் பல, 27 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துகின்றன.
அங்கும், வாகன உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகின்றன. வாகனங்களும் எந்த பிரச்னையும் இன்றி இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.