எத்தியோப்பியா எரிமலை தாக்கம்: நிலைமையை உன்னிப்புடன் கவனிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
எத்தியோப்பியா எரிமலை தாக்கம்: நிலைமையை உன்னிப்புடன் கவனிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
ADDED : நவ 25, 2025 05:45 PM

புதுடில்லி: நாடு முழுவதும் விமான போக்குவரத்து சீராக உள்ளது, எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு குறித்து கவலைப்பட எதுவும் இல்லை என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி பல ஆண்டுகள் கழித்து வெடித்துச் சிதறி வருகிறது. இதன் எதிரொலியாக வானில் சுமார் 14 கிமீ உயரத்துக்கு எரிமலை சாம்பலும், புகையும் சூழ்ந்துள்ளது. இவை வான்வெளியில் கலந்து காற்றின் போக்கில் நகர்வதால், அதன் தாக்கம் இந்தியா, சீனா வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த வான்வெளியில் விமானங்கள் இயக்குவதை தவிர்க்குமாறு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியது. அதையேற்று சில விமான நிறுவனங்களின் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டு உள்ளது. எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;
நவ.23ல் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு, சாம்பல் மேகங்களில் கலந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. சர்வதேச விமான நிறுவனங்களுடன் இணைந்து தடையற்ற போக்குவரத்தை வழங்க உறுதி செய்யப்பட்டு உள்ளது.
முன் எச்சரிக்கையாக சில விமானங்கள் மட்டுமே மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் தரையிறக்கப்பட்டன. விமான சேவை பற்றி கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, உரிய அறிவிப்புகளை வழங்குவோம்.
இவ்வாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

