சாதாரண தொண்டனுக்கும் பா.ஜ.,வில் பதவி கிடைக்கும் பிறந்த நாள் விழாவில் முதல்வர் ரேகா பேச்சு
சாதாரண தொண்டனுக்கும் பா.ஜ.,வில் பதவி கிடைக்கும் பிறந்த நாள் விழாவில் முதல்வர் ரேகா பேச்சு
ADDED : ஜூலை 20, 2025 02:39 AM

புதுடில்லி:டில்லி முதல்வர் ரேகா குப்தா தன், 51வது பிறந்த நாளை, ஹரியானா மாநிலத்தில் தான் பிறந்த ஊரான நந்த்கரில் கொண்டாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ரேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டில்லி முதல்வர் ரேகா குப்தா பிறந்த நாள் வாழ்த்துகள். படிப்படியாக பதவி உயர்ந்த ரேகா, டில்லி முதல்வராக மக்களுக்கு சேவை செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
''டில்லி மாநகரின் வளர்ச்சிக்காக ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமாகவும் வாழ பிரார்த்திக்கிறேன்,” என, கூறியுள்ளார்.
உந்துதல்
பிரதமரின் வாழ்த்துக்கு பதில் அளித்துள்ள ரேகா குப்தா, “பிரதமரின் வாழ்த்துக்கும் ஆசீர்வாதத்துக்கும் நன்றி. பிரதமர் மோடியின் எப்போதும் ஊக்கமளிக்கும் வழிகாட்டுதல் பொதுச் சேவை பயணத்துக்கு தொடர்ந்து பலத்தையும் உந்துதலையும் தருகிறது.
''டில்லி முதல்வராக, 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை டில்லியில் செயல்படுத்த அத்தனை முயற்சிகளையும் செய்து வருகிறேன்,”என, கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உட்பட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யநாத், நயாப் சிங் சைனி உட்பட மாநில முதல்வர்கள், எம்.பி.,. மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் ரேகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாளானா நேற்று, ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் ஜூலானா நகருக்கு வந்த ரேகா குப்தாவை, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். ஜூலானா நகரில் மஹாராஜா அக்ரசென் தர்மசாவை இரு முதல்வர்களும் திறந்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, தான் பிறந்த ஊரான நந்த்கர் கிராமத்தில், மின் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து ரேகா குப்தா பேசியதாவது:
கர்மபூமி
இன்று எனக்கு ஒரு சிறப்பு நாள். நான் பிறந்து வளர்ந்து கிராமத்துக்கு மரியாதை செலுத்த நினைத்தேன். ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் ஹரியானா மக்கள் மிகுந்த அன்பையும் ஆசீர்வாதத்தையும் அளித்தனர்.
எங்கள் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளுக்காக ஹரியானா அரசுக்கும், என் மூத்த சகோதரராக திகழும் நயாப் சைனிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு முறை பல்கலை மாணவர் சங்கத் தேர்தல், மூன்று முறை உள்ளாட்சித் தேர்தல், மூன்று முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டேன். போட்டியிட்ட, எட்டு தேர்தல்களிலும் என் குடும்பத்தினரிடமிருந்தும் சமூகத்திலிருந்தும் எனக்கு மகத்தான ஆதரவு கிடைத்தது.
டில்லியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம், ஹரியானாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் என்னை ஆதரித்தனர். ஒரு சாதாரண மனிதன் முன்னேற வாய்ப்பு கிடைப்பது பா.ஜ.,வில் மட்டுமே.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நயாப் சிங் சைனியும், அரசியல் பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நானும் மாநில முதல்வர்களாக பதவி வகிப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியில், இந்திரா தன்னைத் தவிர வேறு யாரையும் முன்னேற அனுமதிக்கவில்லை. ஆனால், பா.ஜ.,வில் கடைநிலை தொண்டனுக்கும் உயர்ந்த பதவி கிடைக்கும். ஹரியானா என் ஜென்ம பூமி, டில்லி என் கர்மபூமி.
இவ்வாறு அவர் பேசினார்.