'பேர குழந்தை மீது பாசம் இருந்தாலும் வளர்க்கும் உரிமை பாட்டிக்கு கிடையாது'
'பேர குழந்தை மீது பாசம் இருந்தாலும் வளர்க்கும் உரிமை பாட்டிக்கு கிடையாது'
ADDED : செப் 06, 2025 01:14 AM

மும்பை: 'பேரக்குழந்தை உடனான பாசப்பிணைப்பு, அதை வளர்க்கும் அல்லது பராமரிக்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தம்பதிக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. இதில், ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த குழந்தையை பெற்றோர் வளர்த்து வந்தனர். மற்றொரு குழந்தை தந்தைவழி பாட்டியிடம் வளர்ந்து வந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தையை பாட்டி வளர்த்து வந்தார். இந்த சூழலில், தாயாருடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக, குழந்தையை திரும்ப தரும்படி அதன் தந்தை வலியுறுத்தினார். இதற்கு, 74 வயதான பாட்டி மறுப்பு தெரிவித்ததுடன், தானே குழந்தையை வளர்க்க விரும்புவதாக கூறினார்.
குழந்தையை திரும்பப் பெற்றுத் தரக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் தந்தை முறையிட்டார். இதை எதிர்த்து குழந்தையின் பாட்டி மனு தாக்கல் செய்தார்.
அதில், 'குழந்தை பிறந்ததில் இருந்து என்னுடனேயே வளர்கிறது. அதற்கு என்னென்ன தேவை என்பது எனக்கு மட்டுமே தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தையை நானே வளர்க்க அனுமதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பாட்டி தன் பேரக் குழந்தையுடன் பாசப் பிணைப்பை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், அதுவே, அந்த குழந்தையை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது. குழந்தையை வளர்க்கும் உரிமை அதன் பெற்றோருக்கே உண்டு. குழந்தையை வளர்ப்பதில் அவர்களை விட சிறந்த உரிமை பாட்டிக்கு கிடையாது.
சொத்து தகராறு காரணமாக, பெற்றோரின் சட்டப்பூர்வ உரிமையை பறிக்க முடியாது. குறிப்பாக, பாட்டிக்கு 74 வயது ஆகும் நிலையில், பேரக்குழந்தையை பராமரிக்க சட்டத்தில் இடமில்லை. வளர்ப்பது மற்றும் பராமரிப்பதில், குழந்தையின் நலனே முக்கியம்.
எனவே, அடுத்த இரு வாரங்களுக்குள் குழந்தையை அதன் பெற்றோரிடம் பாட்டி தர வேண்டும். அதேபோல், குழந்தையை வந்து பார்க்க பாட்டிக்கு பெற்றோர் அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.