மழை நின்றாலும் வடியாத வெள்ளம் பெங்களூரு நகர மக்கள் கண்ணீர்
மழை நின்றாலும் வடியாத வெள்ளம் பெங்களூரு நகர மக்கள் கண்ணீர்
ADDED : அக் 18, 2024 07:46 AM

பெங்களூரு: மழை நின்றாலும் வெள்ளம் வடியாததால், பெங்களூரு நகர மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. தலைநகரான பெங்களூரில் கடந்த 15ம் தேதி முதல் மூன்று நாட்கள் மழை கொட்டி தீர்த்தது.
சாலைகளில் 4 முதல் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியது. நாகவாராவில் உள்ள மான்யதா தகவல் தொழில்நுட்ப பூங்காவை வெள்ளம் சூழ்ந்தது.
அங்கு கட்டுமான பணிகள் நடந்து வரும் இடத்தில், அருவி போல தண்ணீர் கொட்டிய வீடியோ வெளியானது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. எலஹங்கா கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பு தீவாக மாறியது.
கே.ஆர்.புரம் சாய் லே - அவுட்டில் சாக்கடை கால்வாய், மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த உணவு பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை, பாத்திரங்களில் பிடித்து மக்கள் வெளியே ஊற்றினாலும், தண்ணீர் மறுபடியும் வீட்டிற்குள் வருகிறது. துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
குடிக்க தண்ணீர் இல்லை. உணவு இல்லை. கழிப்பறை செல்ல கூட தண்ணீர் இல்லை என்று, சாய் லே -அவுட் பகுதி மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள, ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால், அதை தடுக்க ஏரிக்கரையில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளன.
நேற்று மழை பெய்யாவிட்டாலும், நகரின் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.