மொபைல் போனுக்கு கூட சார்ஜிங் தேவை: தூங்கும் நேரத்தை கெடுத்துக்காதீங்க: மோடி அறிவுரை
மொபைல் போனுக்கு கூட சார்ஜிங் தேவை: தூங்கும் நேரத்தை கெடுத்துக்காதீங்க: மோடி அறிவுரை
UPDATED : ஜன 30, 2024 03:34 AM
ADDED : ஜன 29, 2024 11:16 PM

புதுடில்லி: ''மொபைல் போனுக்கு கூட சார்ஜிங் தேவைப்படுகிறது. அதுபோல, நம் உடல் மற்றும் மனதையும் புதுப்பித்துக் கொள்ள முறையாக துாங்க வேண்டும். மொபைல் போன் பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும், துாக்கத்தை கெடுத்து கொள்ளக் கூடாது,'' என, தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கினார்.
ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மன அழுத்தம், பதற்றம், நெருக்கடி போன்றவற்றை குறைக்கும் வகையில், 'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும், தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை, பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறார்.
2.26 கோடி பேர்
மத்திய கல்வி அமைச்சகம் ஏழாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ள, கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவர்களிடையே பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.
நாடு முழுதும் இருந்து, 2.26 கோடி பேர் இதற்காக பதிவு செய்திருந்தனர். பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
தேர்வு வீரர்களான மாணவர்கள், தேர்வு குறித்த பயம், அச்சம், மன அழுத்தம், பதற்றம், நெருக்கடிகளை வெல்ல வேண்டும். முதலில் சிறிய இலக்குகளை வைத்து துவக்கினால், படிப்படியாக அதை உயர்த்திக் கொண்டே இறுதித் தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியும்.
எந்த ஒரு நெருக்கடியும் உங்களை படித்துவிட அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற நெருக்கடிகள், சவால்களை, ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவற்றை வெற்றி கொள்ள வேண்டும்.
நாம் ஒரு குளிர் பிரதேசத்துக்கு போனால், அதற்கு தேவையானவற்றுடன் செல்வோம். அதுபோலவே, தேர்வுக்கும் தயாராக வேண்டும்.
பெற்றோர், தங்களுடைய குழந்தையின் மதிப்பெண் பட்டியலை, தங்களுடைய விசிட்டிங் கார்டாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பெருமையாக சொல்லிக் கொள்வதற்காக, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம். அதுபோல, மற்றொருவருடன் உங்களுடைய குழந்தையை ஒப்பிடாதீர்கள்.
தீர்வு கிடைக்கும்
அவர்களுடைய மன அழுத்தத்தை போக்குவதற்கான உதவிகளை பெற்றோர் செய்ய வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களுடன், ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவரிடம் சென்றால், நமக்கு தீர்வு கிடைக்கும் என்று மாணவர்கள் தைரியமாக கேட்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தேர்வுக்காக நன்றாக தயாராக வேண்டியது நிச்சயம் அவசியம். அதற்காக, துாக்கத்தை, உடல்நலத்தை கெடுத்து கொள்ளக் கூடாது.
மொபைல் போனுக்கு கூட, சார்ஜிங் செய்ய வேண்டியுள்ளது. இதுபோல, நம்முடைய உடல் மற்றும் மனத்தை சார்ஜிங் செய்வதற்கு நன்றாக துாங்க வேண்டும்.
மொபைல் போனை பார்ப்பதற்காக, அதில் விளையாடுவதற்காக துாக்கத்தை கெடுத்து கொள்ளக் கூடாது. அதுபோல், நல்ல சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் போது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பிரதமர் விளக்கம் அளித்தார்.