'வெவ்வேறு மொழிகள் பேசினாலும் தர்மமே நாட்டை ஒன்றுபடுத்துகிறது': துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
'வெவ்வேறு மொழிகள் பேசினாலும் தர்மமே நாட்டை ஒன்றுபடுத்துகிறது': துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
ADDED : செப் 29, 2025 12:13 AM

பாட்னா: “நம் நாட்டில் மக்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும் , தர்மம் ஒன்றே தேசத்தை ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான சக்தியாக செயல்பட்டு, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது,” என, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் சாகித்ய அகாடமி சார்பில் 'உன்மேஷா - சர்வதேச இலக்கிய திருவிழா', பீஹாரின் பாட்னாவில் கடந்த 25ம் தேதி துவங்கியது.
ஆசியாவின் மிகப்பெரிய இலக்கிய திருவிழாவான இதில், 15 நாடுகளில் இருந்து ஏராளமான கவிஞர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பீஹார் கவர்னர் ஆரிப் முகமது கான், பீஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
சமீபத்தில், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், 'பொதுவாக ஒரு மொழி இல்லாவிட்டாலும், இந்தியா எப்படி ஒற்றுமையாக இருக்கிறது' என, கேட்டார்.
இந்திய மக்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும், அவர்கள் தர்மத்தின் கருத்து வாயிலாக ஒற்றுமையாக இருக்கிறார்கள் என பதிலளித்தேன்; உண்மையும் அதுதான். நம் நாட்டில் தர்மம் ஒன்றே தேசத்தை ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான சக்தியாக செயல்பட்டு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது.
2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பீஹாரில் சக்திவாய்ந்த மவுரிய பேரரசு ஆட்சி செய்தது. அடுத்து, பண்டைய குடியரசாகிய வைஷாலியின் பிறப்பிடமாகவும் மாறியது.
புத்தர் மற்றும் மஹாவீரர் ஏற்படுத்திய ஆன்மிக மறுமலர்ச்சியை கண்ட இம்மாநிலம், வளமான கலாசார பாரம்பரியத்தை உள்ளடக்கியுள்ளது.
மதுபானி ஓவியங்கள், சாத் திருவிழா போன்றவை மாநில நாட்டுப்புற கலாசாரத்துக்கு சான்றாக உள்ளன. இவை அனைத்தும், இலக்கியத்தின் வளர்ச்சியாலேயே சாத்தியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.