சொல்வதெல்லாம் பொய்: வயநாடு செலவுக்கணக்கை மறுக்கிறார் பினராயி விஜயன்
சொல்வதெல்லாம் பொய்: வயநாடு செலவுக்கணக்கை மறுக்கிறார் பினராயி விஜயன்
ADDED : செப் 17, 2024 04:45 PM

திருவனந்தபுரம்: ''வயநாடு நிலச்சரிவு தொடர்பாக வெளியான வரவு, செலவு குறித்த தகவல் அனைத்தும் ஆதாரமற்றவை, '' என கேரள அரசு தெரிவித்து உள்ளது.
பேரிடர் நிவாரண நிதியை, மாநிலத்தை ஆளும் இடதுசாரி அரசு முறைகேடு செய்வதாக பாஜ., காங்., கூட்டணி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை குற்றம்சாட்டின. மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் பெயரில் கோடிக்கணக்கான பணத்தை பினராயி விஜயன் அரசு பெற்றுள்ளதாக பா.ஜ., குற்றம் சாட்டியது.
அதை மறுத்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பேரிடருக்கு தேவையான அவசர கால நிதி குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தோம். அதில், பல்வேறு தலைப்புகளில் தேவைப்படும் நிதி குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அதனை மாநில அரசு செலவு செய்த நிதி என மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றன. இது ஆதாரமற்ற செய்தி. பேரிடர் செலவு குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தயாரித்த அறிக்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை தவறாக சித்தரிக்கின்றனர்.
மத்திய அரசிடம் நிதி பெறும் மாநில அரசின் முயற்சியை தடுக்கவே இது போன்று தவறான செய்தி பரப்பப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

