ADDED : நவ 04, 2024 09:57 PM

- நமது நிருபர் -
பெங்களூரில் புராதன பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஹலசூரின் சோமேஸ்வரா கோவில், மல்லேஸ்வரம் காடு மல்லேஸ்வரா, பசவனகுடியின் தொட்ட பசவண்ணா, கவிபுரம் கவி கங்காதேஸ்வரா என, பட்டியல் நீளும்.
சிவன் கோவில்கள் மட்டுமின்றி, விஷ்ணுவை ஆராதிக்கும் கோவில்களும் உள்ளன. இவற்றில் சொக்கநாத சுவாமி கோவிலும் ஒன்று.
இக்கோவிலுக்கு சொக்க நாராயணசுவாமி என்ற பெயரும் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட புராதன கோவில். தெலுங்கில் 'சொக்கா' என்றால் அழகு என, அர்த்தமாகும். எனவே கோவிலுக்கு சொக்கநாத சுவாமி என, பெயர் ஏற்பட்டதாம்.
பெங்களூரின் இதய பகுதியான எம்.ஜி., சாலையில் இருந்து பழைய விமான நிலைய சாலையில் இரண்டு கி.மீ., சென்றால், தொம்மலுார் வரும். தொம்மலுாரின் பிரதான சாலையில், இடதுபுறம் திரும்பி 50 மீட்டர் சென்றால், ஒரு உயரமான கம்பத்தை அடையலாம். இதன் இடதுபுறத்தில் உள்ள கட்டடத்தின் படிகளை ஏறி சென்றால், சொக்கநாதரை தரிசிக்கலாம்.
10ம் நுாற்றாண்டு
இது 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். உயரமான அடித்தளத்தில் கட்டப்பட்டது.
கோவிலுக்குள் நுழைந்ததும் சமீபத்தில் கட்டப்பட்ட சிறிய விநாயகர் கோவிலில் விநாயகரை தரிசிக்கலாம். மேலும் நான்கு படிகள் ஏறினால், சொக்கநாத சுவாமியின் தரிசனம் கிடைக்கும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்றாலும், இதை மேம்படுத்தியதில் பில்லர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர அரசர்களின் பங்கும் உள்ளது.
கோவிலின் கம்பங்களில், வாலி, சுக்ரீவ யுத்தம், சிங்கங்களின் ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலின் நுழைவுவாசல் மற்றும், மூலஸ்தானத்தின் சுற்றுப்பகுதி கற்களில் சாசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சொக்கநாத சுவாமி அருகில் ஸ்ரீதேவி, பூதேவியரின் சிலைகள் உள்ளன. கோவில் வளாகத்தில் ஆஞ்சனேயசுவாமியின் சிறிய சன்னிதி உள்ளது. கோவில் வளாகத்தில் அன்னதானக்கூடம், அர்ச்சகரின் இல்லம் உள்ளது. 30 ஆண்டுகளில் பல முறை கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உற்சவம் நடக்கும். உகாதி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். தினமும் காலை 8:30 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி உள்ளது.
விரும்பியது நடக்கும்
எப்போதும் வாகன சத்தம், மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக தென்படும் பெங்களூரு நகரின், இதய பகுதியில் இருந்தாலும், சொக்கநாத சுவாமி கோவிலில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சி தரும் சொக்கநாத சுவாமியை தரிசித்தால், மனதில் நிம்மதி, அமைதி ஏற்படும். விரும்பியது நடக்கும் என்பது ஐதீகம்.

