எல்லாம் எதிர்பார்த்தது தான்: அதானி விளக்கம் குறித்து ராகுல் கருத்து
எல்லாம் எதிர்பார்த்தது தான்: அதானி விளக்கம் குறித்து ராகுல் கருத்து
UPDATED : நவ 27, 2024 04:03 PM
ADDED : நவ 27, 2024 04:00 PM

புதுடில்லி: ''தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளை அதானி மறுப்பார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான், '' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.
பிரபல தொழிலதிபர் அதானி, தன் தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு இரண்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்ததாகவும், அந்தத் தகவலை மறைத்து அமெரிக்கர்களிடம் கணிசமான முதலீடுகளை திரட்டி உள்ளதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதானியை கைது செய்து ஆஜர்படுத்தவும் அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அதானி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அதானி, அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இல்லை. அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டு ஏதுவும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டில்லியில் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: தன் மீதான குற்றச்சாட்டுகளை அதானி ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக அவர் எதிர்ப்பார். ஆனால், நாங்கள் கூறியபடி அவர் கைது செய்யப்பட வேண்டும்.நூற்றுக்கணக்கான மக்கள், சிறிய குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அதானி மீது அமெரிக்க அரசு ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு குற்றம்சாட்டி உள்ளது. அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால், அரசு அவரை பாதுகாக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

