பிரிஜ்பூஷண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆதாரம் உள்ளது: நீதிமன்றம்
பிரிஜ்பூஷண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆதாரம் உள்ளது: நீதிமன்றம்
ADDED : மே 10, 2024 06:01 PM

புதுடில்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான ஆதாரம் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 10 ஆண்டுகள் இருந்தவர் பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் மீது முன்னணி மல்யுத்த வீராங்கனையர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்து மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் சிங் விலகினார். இக்குற்றச்சாட்டு காரணமாக, அவருக்கு பதிலாக அவரது மகன் கரண் பூஷணுக்கு கைசர்கஞ்ச் தொகுதியில் இம்முறை வாய்ப்பு அளித்துள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் காரணமாக, அவர் பிரிஜ்பூஷண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரிஜ் பூஷண் கோரிக்கையை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவர் மீதான வழக்கில் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், பிரிஜ்பூஷண் மீது 5 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், 354 மற்றும் 354 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. 6வது வீராங்கனை அளித்த குற்றச்சாட்டில் இருந்து பிரிஜ்பூஷணை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.